சமசீர் கல்வி 11 ஆம் வகுப்பு பாட புத்தகம் கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து

அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே
ஆரமிர்தே என்கண்ணே அறிய வான
பொருளனைத்தும் தரும்பொருளே கருணை நீங்காப்
பூரணமாய் நின்றவொன்றே புனித வாழ்வே
கருதரிய கருத்ததனுட் கருத்தாய் மேவிக்
காலமும்தே சமும்வகுத்துக் கருவி ஆதி
விரிவினையும் கூட்டிஉயிர்த் திரளை ஆட்டும்
விழுப்பொருளே யான்சொலும்விண் ணப்பங் கேளே
– தாயுமானவர்

குறிப்பு:

 • தாயுமானவர் பாடல்கள் என்னும் தொகைநூலில் 1452 பாடல்கள் உள்ளன.
 • இந்நூல் “தமிழ் மொழியின் உபநிடதம்” எனப் போற்றப்படுகிறது.
 • இவர் வேதாரண்யம் என்னும் திருமறைக்காட்டில் கேடிலியப்ப பிள்ளைக்கும், கெசவல்லி அம்மைக்கும் மகனாகப் பிறந்தார்.
 • திருச்சியில் உள்ள தாயுமானவர் அருளால் பிறந்தமையால் இவருக்கு தாயுமானவர் எனப் பெயரிடப்பட்டது.
 • கேடிலியப்ப பிள்ளை திருச்சிராப்பள்ளியை ஆண்ட விசயரங்க சொக்கநாத நாயக்கர் என்ற அரசரிடம் கணக்கராகப் பணிபுரிந்து வந்தார்.
 • அவர் மறைவுக்குப் பின்னர்த் தாயுமானவர் அப்பணியை ஏற்றார்.
 • இவரின் மனைவி மட்டுவார்குழலி.
 • திருமூலர் மரபில் வந்த மௌனகுருவிடம் ஆசி பெற்றவர்.
 • இவர் முக்தி அடைந்த இடம் இராமநாதபுரம் மாவட்டம் இலட்சுமிபுரம்.
 • காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.

சொற்பொருள்:

 • ஆரமிர்தே – அரிய அமிழ்தே
 • பூரணமாய் – முழுமையாய்
 • புனிதம் – தூய்மை
 • விழுப்பொருள் – மேலானப்பொருள்

இலக்கணக்குறிப்பு:

 • பழச்சுவை – ஆறாம் வேற்றுமைத் தொகை
 • தரும் பொருளே – செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம்
 • காலமும் தேசமும் – எண்ணும்மை
 • உயிர்த்திரள் – ஆறாம் வேற்றுமைத் தொகை
 • விழுப்பொருள் – உரிச்சொற்றொடர்

Leave a Comment

Your email address will not be published.