தூங்கா நகர்
மதுரை நகரின் சிறப்புப் பெயர்கள்:
தூங்கா நகர், திருவிழா நகர், கோவில் நகர், பழம்பெரும் தமிழரின் நாகரீக தொட்டில், தென்னிந்தியாவின் ஏதென்ஸ், கூடல் நகர், ஆலவாய் |
மதுரை – பெயர்க்காரணம்:
- “மதுரை” என்னும் சொல்லுக்கு “இனிமை” என்பது பொருள். தமிழும் மதுரையும் இனிமையின் இயல்பால் அமைந்தவை. மதுரை பற்றி புலவர்கள் கூறும் போதெலாம் தமிழோடு சேர்த்தே கூறினர்.
புறநானூறு
- தமிழ்கெழு கூடல்
சிறுபாணாற்றுப்படை:
“தமிழ்நிலை பெற்ற தாங்கறு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை” -சிறுபாணாற்றுப்படை(நல்லூர் நத்தத்தனார்) |
சிலப்பதிகாரம்:
“ஓங்குசீர் மதுரை” “மதுரை மூதூர் மாநகர்” “தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை” “மாண்புடை மரபின் மதுரை” “வானவர் உறையும் மதுரை” “பதியெழுவறியாப் பண்பு மேம்பட்ட மதுரை மூதூர்” |
தமிழகத்தின் சிறப்பு:
சேரநாடு – வேழமுடைத்து சோழநாடு – சோறுடைத்து பாண்டியநாடு – முத்துடைத்து தொண்டைநாடு – சான்றோர் உடைத்து |
நான்மாடக்கூடல்:
- மதுரைக்கு கூடல் எனவும், ஆலவாய் எனவும் வேறு பெயர்கள் உள்ளன.
- நான்மாடக்கூடல் என்னும் பெயரே கூடல் என மருவி உள்ளது.
- “திருவாலவாய், திருநள்ளாறு, திருமுடங்கை, திருநடுவூர்” ஆகிய நான்கு திருக்கோவில்கள் சேர்ந்தமையால், “நான்மாடக்கூடல்” என்னும் பெயர் வழங்கலாயிற்று என்பர்.
- “கன்னிக்கோவில், கரியமால் கோவில், காளிக்கோவில், ஆலவாய்க் கோவில்” ஆகிய நான்கு திருக்கோவில்களும் மதுரைக்குக் காவலாக அமைந்தமையால், “நான்மாடக்கூடல்” என்னும் பெயர் வந்தது என்றும் கூறுவர்.
பரஞ்சோதியார் கூற்று:
- வருணன், மதுரையை அழிக்க ஏழு மேகங்களை அனுப்பினான். அதைப் பற்றி இறைவனிடம் பாண்டியன் முறையிட, இறைவன் நான்கு மேகங்களை மதுரையைக் காக்க அனுப்பினார். அந்நான்கும் நான்கு மாடங்களாக கூடி மதுரையைக் காத்தமையால் “நான்மாடக்கூடல்” என்னும் பெயர் ஏற்பட்டதாக பரஞ்சோதியார் கூறியுள்ளார்.
அறிஞர்கள் கூற்று:
- எந்நாட்டவரும் எவ்வூரினரும் வந்து கூடும் வளமான நகர் என்பதால், கூடல் எனப் பெயர் பெற்றதாக கூறுவர்.
- சங்கம் வைத்துச் செந்தமிழை வளர்க்க, புலவர் எல்லோரும் கூடியதால், கூடல் என்னும் பெயர் ஏற்பட்டதாக அறிஞர் கூறுவர்.
ஆலவாய் – திருவிளையாடற புராணம் கூற்று:
- மதுரையை விரிவுபடுத்த எண்ணி, இறைவனிடம் அதன் எல்லையை வரையறுத்துத் தருமாறு வேண்டினான் பாண்டியன். இறைவன், தன் கையணியாகிய பாம்பிடம் எல்லையை வரையறுக்க ஆணையிட்டார். பாம்பு வாழை நீட்டி வலமாகத் தன் உடலை வளைத்தது. அவ்வாலைத் தனது வாயில் சேர்த்து மதுரையின் எல்லையை வகுத்துக் காட்டியது. அன்று முதல், மதுரைக்கு ஆலவாய் என்னும் பெயர் அமைந்ததாகத் “திருவிளையாடற்புராணம்” கூறுகிறது. ஆலவாய் என்பது ஆலத்தை(விடத்தை) உடைய பாம்பினைக் குறிக்கும்.
வேறு காரணம்:
- மதுரையில் எழுந்தருளிய ஈசன், ஆலமர நிழலில் வீற்றிருந்ததால் “ஆலவாய்” என்னும் பெயர் ஏற்பட்டதாக கூறுவர்.
மருதை – மதிரை:
- மருத மரங்கள் அடர்ந்த பகுதியாக இருந்தமையால் “ம்ஸ்ருதை” என வழங்கிய இடம், காலப்போக்கில் மதுரை என்றாகியதாம். கல்வெட்டில் “மதிரை” என்ற பெயர் காணப்படுகிறது.
மதுரை நகரமைப்பு:
- மதுரை நகரின் நடுவில் அண்ணல் கோவிலும் அதனைச் சுற்றி முறையாக ஒழுங்குற அமைந்த தெருக்களும் காண்பதற்குத் தாமரைப் பொகுட்டையும் அடுக்கடுக்கான இதழ்களையும் போன்று காட்சியளித்தன. இது அன்றைய தமிழர் நகரமைப்புக் கலையின் நுணுக்கத்தை உலகிற்குப் பறைசாற்றும் அடையாளமாகத் திகழ்கின்றன.
மதுரை வீதிகளின் பெயர்கள்:
அறுவை வீதி – ஆடைகள் விற்கும் கடைப்பகுதி கூலவீதி – தானியக்கடை பொன்வீதி – பொற்கடைகள் மன்னவர் வீதி – மன்னர் வாழும் பகுதி மறையவர் வீதி – அந்தணர் வீதி |
மதுரையின் மாண்பு:
- சிவபெருமான் சுந்தரபாண்டியனாகவும் செவ்வேள் உக்கிரகுமாரப்பாண்டியனாகவும் உமையம்மை மலையத்துவசனக்கு மகளாகத் தோன்றித் தடாதகைப் பிராட்டியாகவும் மதுரையை ஆண்டனர்.
- அரிமர்த்தன பாண்டியனக்கு அமைச்சராக மாணிக்கவாசகர் திகழ்ந்தார்.
- திருஞானசம்பந்தர் கூன்பாண்டியன் காலத்தில் மதுரையில் மங்கையர்க்கரசி, குலச் சிறையார் உதவியுடன் சைவத்தைக் காத்தார்.
திருமலை நாயக்கரின் திருப்பணிகள்:
- திருமலை நாயக்கர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டார்.
- கோடை விடுதியான தமுக்கமும், குளிர்பூந்தடாகமாகிய பெரிய தெப்பக் குளமும், கலை நயத்தில் “தாஜ்மகாலை” ஒத்த “திருமலை நாயக்கர் மகாலை”யும் அமைத்து மதுரையை அழகுபடுத்தினார்.
- மதுரையை “விழ மல்கு நகராக” மாற்றினார்.
நிகழ்வுகள்:
- பரஞ்சோதியாரின் திருவிளையாடற்புராணம் தருமிக்கு இறைவன் தண்டமிழ்ப் பாடல் தந்தமை பற்றிக் கூறுகிறது.
- மதுரைச் சுற்றியுள்ள மலைகளில் வாழ்ந்த சமண முனிவர்களால் “நாலடியார்” இயற்றப் பெற்றது.
- குமரகுருபரருக்கு மீனாட்சியம்மையே சிறுமியாக வந்து முத்துமணி மாலையைப் பரிசளித்தார்.
நான்காம் தமிழ்ச்சங்கம்:
- வள்ளல் பாண்டித்துரை தேவர், மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்தனர்.
கோவலன் பொட்டல்:
- சிலப்பதிகாரக் காப்பியத் தலைவன் கோவலன் கொலைக்களப்பட்ட இடம் “கோவலன் பொட்டல்” என்னும் பெயருடன் இன்றும் அப்பகுதி மக்களிடம் வழங்கப்படுகிறது.
செல்லத்தம்மன் கோவில்:
- கையில் சிலம்புடன் உட்கார்ந்திருக்கும் உருவச்சிலை அமைந்த கோவில், செல்லத்தம்மன் கோவிலாக இன்றும் மக்களால் வழிபடப்படுகிறது.
பொதுவான குறிப்பு:
- மீனாட்சியம்மன் கோவிலின் நான்கு கோபுரங்களுள் பழமையானது கிழக்குக் கோபுரம்; உயரமானது தெற்குக் கோபுரம். இது 16௦0.9 அடி உயரமும் 1511 சுதை உருவங்களும் .
- மரம் பயன்படுத்தாமல் கட்டப்பட்டது நாயக்கர் மகால். இதன் ஒவ்வொரு தூணும் 82 அடி உயரமும் 19 அடி சுற்றளவும் கொண்டது.