தமிழின் சிறப்புகளைப் பற்றி ஆய்வுகள் பல செய்தமையால் ‘தமிழ் இமயம்’ என்று தமிழ் அறிஞர்களால் போற்றப்பட்டவர் வ.சுப. மாணிக்கம்.
‘எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’ என்ற கொள்கையைப் பறைசாற்றுவதற்காகத் ‘தமிழ்வழிக் கல்வி இயக்கம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ்ச்சுற்றுலா மேற்கொண்டவர்.
அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகவும் முதல்வராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றினார்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தராகச் சிறப்புடன் செயலாற்றிய போது பல்கலைக்கழக நடைமுறைகள் தமிழில் இருக்க வேண்டும் என ஆணை பிறப்பித்ததுடன் அங்குத் தமிழாய்வு நடைபெறவும் வழிவகுத்தார்.
வ சுப மாணிக்கம்
திருவனந்தபுரத்தின் திராவிட மொழியியல் கழகத்தில் முதுபேராய்வாளராகப் பணிபுரிந்தபோது ‘தமிழ் யாப்பியல் வரலாறும் வளர்ச்சியும்’ என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
சங்கப் பாடல்களின் நுட்பங்களைக் கட்டுரைகளாக எழுதுவதில் ஆற்றல் மிக்கவரான இவர் தமிழ்க்காதல், வள்ளுவம், கம்பர், சங்கநெறி உள்ளிட்ட பல நூல்களை இயற்றியவர்.
தமிழுக்குப் புதிய சொல்லாக்கங்களையும் உவமைகளையும் உருவாக்கித் தருவதில் தனி ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தவர்.
ஆராய்ச்சி, கட்டுரை, நாடகம், கவிதை, உரை, கடித இலக்கியம், பதிப்பு எனப் பல்துறை ஆளுமையான அவருக்குத் தமிழக அரசு அவருடைய மறைவிற்குப் பிறகு, திருவள்ளுவர் விருது வழங்கியதுடன் 2006ஆம் ஆண்டு அவருடைய நூல்களை நாட்டுடமையாக்கிச் சிறப்புச் செய்தது.