“தமிழில் எல்லாம் உண்டு; தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்கமுடியும்” எனச் சான்றுகளுடன் எடுத்துச் சொன்ன பெருந்தகை இரசிகமணி டி.கே. சிதம்பரநாதர்.
இவர், தமது இலக்கிய இரசிகத் தன்மையால் தமிழுக்கும் தமிழருக்கும் புத்துணர்வு ஊட்டியவர்.
வட்டத் தொட்டி
டி. கே. சி. யின் வீட்டுக் கூடத்தில் வட்ட வடிவமான தொட்டிக் கட்டில், ஞாயிறுதோறும் மாலை ஐந்து மணிக்குக் கூடிய கூட்டம், இலக்கியத்தைப் பற்றிப்பேசியது. அவ்வமைப்பு ‘வட்டத் தொட்டி’ என்றே பெயர்பெற்றது.
டி. கே. சி. இலக்கியங்களின் நயங்களைச் சொல்லச் சொல்லக் கூட்டத்திலுள்ள அனைவரும் தங்களை மறந்து இலக்கியத்தில் திளைப்பர்.
தமிழின் இனிமை என்பது மட்டும் அவர்கள் உள்ளங்களில் நிறைந்திருக்கும்.
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி. விரும்பினார்.
தமிழ்க்கலைகள், தமிழ் இசை, தமிழ் இலக்கியம் ஆகியவற்றின் சுவையையும் மேன்மையையும் தனித்தன்மையையும் எடுத்துச் சொன்னார்.
கடிதங்களிலும் அவற்றையே வியந்து எழுதினார்.
அவர்தம் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாகவே கருதப்பட்டன.
இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்களும் முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு எழுதிய உரையும் அவர்தம் இலக்கிய நுகர்வுக்கடலின் சில அலைகள் எனலாம்.
சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும் அறநிலையத் துறையின் ஆணையராகவும் திகழ்ந்த டி. கே. சி. ஏற்றிய இலக்கியஒளி தமிழ் அழகியலை வெளிச்சப்படுத்தியது.