நாடகத்தமிழை வளர்த்த நல்லறிஞராய்த் திகழ்ந்த சங்கரதாசு சுவாமிகள், நாடகங்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும் முதல்வராகவும் விளங்கினார்.
இளமையில் புலவரேறு பழநி தண்டபாணி சுவாமிகளைத் தேடிச் சென்று, தமிழறிவைப் பெற்ற இவர் தம்முடைய 16 ஆவது வயதிலேயே கவியாற்றல் பெற்று வெண்பா, கலித்துறை இசைப்பாடல்களை இயற்றத் தொடங்கிவிட்டார்.
இரணியன், இராவணன், எமதருமன் ஆகிய வேடங்களில் நடித்துப் புகழடைந்தபோது அவருடைய வயது 24.
வண்ணம், சந்தம் பாடுவதில் வல்லவராயிருந்த சுவாமிகளின் ‘சந்தக்குழிப்புகளின்’ சொற்சிலம்பங்களைக் கண்டு அக்காலத்தில் மக்கள் வியப்புற்றனர்.
சமரச சன்மார்க்க சபை
சங்கரதாஸ் சுவாமிகள் ‘சமரச சன்மார்க்க சபை’ என்னும் நாடகக் குழுவை உருவாக்கினார்.
இந்தக் குழுவில் பயிற்சி பெற்ற எஸ்.ஜி. கிட்டப்பா நாடகக் கலைத்துறையில் பெரும்புகழ் ஈட்டினார்.
தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை
மேடை நாடகம் தரம் குன்றிய நிலையில், மதுரை வந்த சுவாமிகள், 1918இல், ‘தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை’ என்னும் நாடக அமைப்பை உருவாக்கி ஆசிரியர் பொறுப்பேற்றார்.
இங்கு உருவானவர்களே டி.கே.எஸ். சகோதரர்கள்.
தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்
நாடகத்தின் மூலம் மக்களுக்கு அறவொழுக்கத்தையும் தமிழின் பெருமையையும் பண்பாட்டையும் தம் சுவைமிகுந்த பாடல், உரையாடல் வழியே உணர்த்திய சங்கரதாசு சுவாமிகளை நாடகத் துறைக் கலைஞர்கள், ‘தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர்‘ என்று உளமகிழ்ந்து போற்றுகின்றனர்.