வல்லினம் மிகும் இடங்கள்
வல்லினம் மிகும் இடங்கள்
- நிலைமொழிச் சொற்களுக்குப் பின், வருமொழிச் சொற்கள் வந்து புணரும்போது க், ச், த், ப், ஆகிய வல்லொற்றுகளின் வருக்க எழுத்துகள் வந்தால், அவ்வல்லொற்றுகள் சில இடங்களில் மிகுந்தும், சில இடங்களில் மிகாமலும் வரும். இவற்றையே வலிமிகுமிடங்கள், வலிமிகா இடங்கள் என்பர் (வலி – வல்லினம்).
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
வல்லினம் மிகும் இடங்கள்
- நிலைமொழி உயிரீற்றுச் சொல்லின்பின் வல்லினம் (க்,ச்,த்,ப்) மிகும்.
- அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்.
- அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்.
- அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்.
- இரண்டாம் வேற்றுமை (ஐ) விரியின்பின் வரும் வல்லினம் மிகும்.
- நான்காம் வேற்றுமை (கு) விரியில் வரும் வல்லினம் மிகும்.
- ஓரெழுத்து ஒருமொழியில் வரும் க், ச், த், ப் மிகும்.
- வன்றொடர்க் குற்றியலுகரத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
- இகர ஈற்றுச் ‘செய்து’ என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
- அகரஈற்றுச் ‘செய’ என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்.
- சால, தவ என்னும் உரிச்சொற்கள்பின் வரும் வல்லினம் மிகும்.
- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்முன் வல்லினம் மிகும்.
நிலைமொழி உயிரீற்றுச் சொல்லின்பின் வல்லினம் (க்,ச்,த்,ப்) மிகும்
- கறி + குழம்பு = கறிக்குழம்பு
- பலா + சுளை = பலாச்சுளை
- வழி + தடம் = வழித்தடம்
- பாட்டு + போட்டி = பாட்டுப்போட்டி
அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும், எ என்னும் வினா எழுத்தின் பின்னும் வல்லினம் மிகும்
- அ + கடை = அக்கடை
- இ + சட்டை = இச்சட்டை
- உ + பக்கம் = உப்பக்கம் (செய்யுள் வழக்கு)
- எ + பாடம் = எப்பாடம்
அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்
- அந்த + கோவில் = அந்தக் கோவில்
- இந்த + சட்டி = இந்தச் சட்டி
- எந்த + தோட்டம் = எந்தத் தோட்டம்
அப்படி, இப்படி, எப்படி என்னும் சொற்களின்பின் வரும் வல்லினம் மிகும்
- அப்படி + கூறினான் = அப்படிக் கூறினான்.
- இப்படி + தாவினான் = இப்படித் தாவினான்.
- எப்படி + சொன்னான் = எப்படிச் சொன்னான்.
இரண்டாம் வேற்றுமை (ஐ) விரியின்பின் வரும் வல்லினம் மிகும்
- பாரியை + கண்டான் = பாரியைக் கண்டான்.
- பொருளை+ சேர்த்தான் = பொருளைச் சேர்த்தான்.
- அவனை + தடுத்தான் = அவனைத் தடுத்தான்.
- நிலவை + பார்த்தான் = நிலவைப் பார்த்தான்.
நான்காம் வேற்றுமை (கு) விரியில் வரும் வல்லினம் மிகும்
- எனக்கு + கொடு = எனக்குக் கொடு.
- குழந்தைக்கு + சோறு = குழந்தைக்குச் சோறு.
- அவளுக்கு + தா = அவளுக்குத் தா.
- பாப்பாவுக்கு + பாட்டு = பாப்பாவுக்குப் பாட்டு
ஓரெழுத்து ஒருமொழியில் வரும் க், ச், த், ப் மிகும்
- ஈ + கால் = ஈக் கால்
- தீ + சட்டி = தீச் சட்டி
- கை + தடி = கைத் தடி
- தை + பொங்கல் = தைப் பொங்கல்
வன்றொடர்க் குற்றியலுகரத்தின்பின் வரும் வல்லினம் மிகும்
- கொக்கு + கால் = கொக்குக் கால்
இகர ஈற்றுச் ‘செய்து’ என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்
- ஓடி + போனான் = ஓடிப்போனான்.
அகரஈற்றுச் ‘செய’ என்னும் எச்சத்தின்பின் வரும் வல்லினம் மிகும்
- பாட + கேட்டேன் = பாடக் கேட்டேன்.
- தேட + சென்றாள் = தேடச் சென்றாள்.
- பாட + தெரியுமா? = பாடத் தெரியுமா?
- ஓட + பார்த்தான் = ஓடப் பார்த்தான்.
சால, தவ என்னும் உரிச்சொற்கள்பின் வரும் வல்லினம் மிகும்
- சால + பசித்தது = சாலப் பசித்தது.
- தவ + சிறிது = தவச் சிறிது.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தின்முன் வல்லினம் மிகும்
- காணா + கண்கள் = காணாக் கண்கள்
- கேளா + செவி = கேளாச் செவி
- ஓடா + தேர் = ஓடாத் தேர்
- நாறா + பூ = நாறாப் பூ.