“பொறுமையைப் பூணுங்கள்; பொறுமையின் ஆற்றலை உணருங்கள்; உணர்ந்து உலகை நோக்குங்கள்; நமது நாட்டை நோக்குங்கள்; நமது நாடு நாடாயிருக்கிறதா? தாய்முகம் நோக்குங்கள்; அவள் முகத்தில் அழகு காணோம். அவள் இதயம் துடிக்கிறது. சாதி வேற்றுமை, தீண்டாமை, பெண்ணடிமை உட்பகை முதலிய நோய்கள் அவளை அரிக்கின்றன; எரிக்கின்றன; இந்நோய்களால் குருதியோட்டங்குன்றிச் சவலையுற்றுக் கிடக்கிறாள். இள ஞாயிற்றொளி நோக்கி நிற்கிறாள். இளஞாயிறுகளே! உங்கள் தொண்டெனும் ஒளியே அவள் நோய்க்குரிய மருந்து. அவ்வொளி வீசி எழுங்கள்; எழுங்கள்” என்று இளமைவிருந்து நூலில் தமிழினைச் செழுமையுறச்செய்ய இளைஞர்களை அழைத்தவர் திரு.வி.க.
திரு.வி.க தம் தந்தையிடம் தொடக்கத்தில் கல்வி பயின்றார்.
வெஸ்லி பள்ளியில் படித்தபோது, நா. கதிரைவேலர் என்பவரிடம் தமிழ் படித்தார்.
பிறகு மயிலை தணிகாசலம் என்பவரிடம் தமிழோடு சைவ நூல்களையும் பயின்றார்.
திரு.வி.க
‘தமிழ்த்தென்றல்’ என்று அழைக்கப்படும் திரு.வி.க. பெண்ணின் பெருமை, முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், என் கடன் பணி செய்து கிடப்பதே, சைவத்திறவு, இந்தியாவும் விடுதலையும், பொதுமை வேட்டல், திருக்குறள் விரிவுரை முதலிய பல நூல்களை எழுதினார்.
சிறந்த மேடைப்பேச்சாளராகவும் எழுத்தாளராகவும் விளங்கிய இவர் தேசபக்தன், நவசக்தி இதழ்களுக்கு ஆசிரியராகவும் விளங்கினார்
தமிழ் அறிஞர்களுள் அரசியல் இயக்கங்களில் அதிகமான ஈடுபாடு கொண்டவராக இருந்தார்.