நாடகவியல்
நாடகவியல்
- தமிழ்மொழியின்கண் வழங்கும் கலைகளை இயல் இசை நாடகம் எனப் பகுத்துக் கூறுவது மரபு.
- சங்க காலத்தில் நாடக அரங்கில் நிகழ்த்துகலை நிகழ்ந்ததற்கான அடையாளங்களாக ஆடல், நடனம், நாட்டியம் போன்ற சொற்கள் கிடைக்கின்றன.
- ஆட்டத்தோடு பேச்சும் கலந்து நிகழ்த்தப்பெற்றது நாடகம். பழந்தமிழில் கூத்து என்ற சொல் நாடகத்தைக் குறித்தது.
JOIN OUR TELEGRAM CHANNEL – T.ME/TNPSC_WINNERS
நாடகத்தின் தோற்ற வரலாறு
- தெய்வங்களை வணங்குதல், வெற்றிக் கொண்டாட்டம், சமூக சடங்குகள் போன்ற நிகழ்வுகளின்போது மக்களை மகிழ்விக்க நிகழ்த்தப்பட்ட நடனங்களும் கூத்துகளும் நாளடைவில் பல்வேறு நிலைகளில் மாற்றம் பெற்று நாடகமாக வளர்ச்சியடைந்தன.
- அரங்கம் மற்றும் அரங்க நிகழ்வுகள் குறித்துத் தொல்காப்பியத்தின் மெய்ப்பாட்டியல் வழியாகவும் சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக்காதை வழியாகவும் விரிவான செய்திகளை அறியமுடிகிறது.
- பிற்காலச் சோழ, பாண்டிய மன்னர்கள் நாடகக்கலை வளர உறுதுணையாக இருந்தனர்.
- கலைஞர்களுக்குப் பரிசுகளும், பட்டங்களும், நிலங்களும் கொடுத்து ஊக்குவித்த குறிப்புகளை அவர்களின் கல்வெட்டுகள் காட்டுகின்றன.
- பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் பள்ளு, குறவஞ்சி, நொண்டி, கீர்த்தனை, நாட்டார் நாடகங்கள் எனப் பல்வேறு நாடக வகைமைகள் தோன்றின.
நவீன நாடகத்தின் தோற்றம்
- இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்களின் ஆட்சி மற்றும் கல்விமுறைகளால் ஒவ்வொரு துறையிலும் நவீனத்தன்மை புகுந்தது. நாடகக் கலையும் இதற்கு விதிவிலக்கல்ல.
- ஐரோப்பிய, பார்சிய, மராத்திய அரங்கியலை உள்வாங்கிய நாடக நிகழ்வுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் நிகழ்ந்தன.
- அதன்பின் தமிழ் நாடகக் கலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது.
- நாடகங்களின் அமைப்பு, மேடை அலங்காரம், உத்திகள், ஒப்பனைகள், நாடகம் நடக்கும் கால அளவு போன்றவற்றில் மாற்றம் ஏற்பட்டது. அதனால் நாள்தோறும் காணும் நிகழ்ச்சியாக நாடகக்கலை மாறியது.
- நாடகத்துறையின் புதிய பரிமாணத்திற்குக் காரணமாக அமைந்தவர்களாகச் சங்கரதாஸ் சுவாமிகள், பம்மல் சம்பந்தனார், பரிதிமாற் கலைஞர் ஆகியோரைக் குறிப்பிடலாம்.
- சங்கரதாஸ் சுவாமிகள் கூத்திற்குப் புதிய வடிவம் தந்ததுடன், மேலைநாட்டு உத்திகளையும் இணைத்துப் புதிய போக்கினை உருவாக்கித் தந்தார். தமிழ் நாடகங்களில் பாடல்களின் கருத்துகளைப் பொதுமக்கள் புரிந்து கொள்ளும் வகையில் உரைநடையில் இடம்பெறச் செய்தார்.
- 1891 ஆம் ஆண்டு சுகுண விலாச சபையை நிறுவிய பம்மல் சம்பந்தனார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மேடைகளில் பல புதுமைகளைக் கையாண்டார்.
- பரிதிமாற்கலைஞரின் நாடகவியல் என்னும் நூல் நாடகக்கலைக்கு இலக்கணம் வகுத்தது.
- ஆங்கிலேயரை வெளியேற்றும் நோக்கோடு பரப்புரை நாடகங்களும் அரங்கேறின. பிறகு திராவிட இயக்க நாடகங்களும் சபா நாடகங்களும் வளர்ச்சி பெற்றன.
தமிழின் முதல் மௌன நாடகம்
- 1946 ஆம் ஆண்டு தமிழில் முதன் முதலாக “அமைதி” என்னும் தலைப்பில் உரையாடல் இல்லாத மௌன நாடகம், பாரதிதாசனால் எழுதப்பட்டது. இது 16 காட்சிகளை கொண்டது.
நாடக அமைப்புகள்
- அகில இந்திய அளவில் ‘பாரதீய நாட்டியகஸ்’ என்னும் நாடக அமைப்பு உருவாக்கப்பட்டு, யுனெஸ்கோவின் சர்வதேச நாடகக்கலை மையத்தோடு இணைக்கப்பட்டது.
- இந்திய அரசின் முயற்சியால் நிகழ்கலைகளின் வளர்ச்சிக்காக மத்திய சங்கீத நாடக அகாதெமியும் நாடகத்துறைக்கென்றே பயிற்சியளிக்க தேசிய நாடகப் பள்ளியும் உருவாக்கப்பட்டன.
- இதனையடுத்து உலக நாடகக் கழகமும் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்புகள் நவீன நாடகங்களின் வளர்ச்சிக்கு வித்திட்டன.
நவீன நாடகத்தின் நோக்கம்
- தொடக்க நிலையில் நவீன நாடகம், தெரு நாடகம் (Street Play) என்ற நிலையிலேயே மக்களிடம் அறிமுகமாகியது. எனவே எளிய அரங்கு என்ற பெயராலேயே இது சுட்டப்பட்டது.
- நவீன நாடகக் கலைஞர்கள் மக்கள் முன் தங்கள் நாடகங்களை நடத்திக் காட்ட மேடையமைப்பையோ, அரங்கேற்ற உத்திமுறைகளையோ பயன்படுத்தவில்லை.
- நவீன நாடகம், மரபுமுறை நாடகக் கூறுகளான அங்கம், களம் போன்றவற்றிற்கு முதன்மை தராமல் கருத்துகளை மட்டுமே முதன்மைப்படுத்தியது.
- பொருட்செலவைத் தவிர்த்து, எந்த இடத்திலும் நாடகத்தை நிகழ்த்தலாம் என்ற சூழ்நிலையை உருவாக்கியது. மக்களைக் கற்பனை உலகிற்குக் கொண்டு செல்லாமல் சமூகச் சிக்கல்களை அந்தந்தச் சூழ்நிலையிலேயே மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்பதே நவீன நாடகத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.
- நவீன நாடகம், பார்வையாளர்களுக்கும் நடிகர்களுக்கும் இருந்த இடைவெளியைக் குறைத்து அவர்களுக்கிடையேயான கருத்துப் பரிமாற்றத்தை முதன்மைப்படுத்தியது. பாத்திரங்கள், பார்வையாளரின் இடையில் சென்று நடிப்பதும் உண்டு.
- மக்கள், நாடகத்தை நோக்கி வந்த நிலையை மாற்றி, நாடகம் மக்களை நோக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
- நவீன நாடகம் புதுமையும் புரட்சிகரமான உணர்வும் கொண்டவர்களாலும், மக்கள் நலம்காக்க எண்ணியவர்களாலும் உருவாக்கப்பட்டது.
தமிழ் நாடகக்கலையின் மறுமலர்ச்சிக் காலம்
- சிறுபத்திரிகைகளில் எழுதிய சிறுகதை ஆசிரியர்கள், தமிழ் இலக்கியத்துறையைச் சார்ந்த பேராசிரியர்கள், பொதுவுடைமைக் கருத்துகளின் பால் ஈடுபாடு கொண்ட எழுத்தாளர்கள் முதலானோர் நவீன நாடகம் பற்றிச் சிந்திக்கத் தொடங்கினர்.
- இதன் விளைவாக இருபதாம் நூற்றாண்டின் இறுதி இருபதாண்டுகள், தமிழ் நாடகக்கலையின் மறுமலர்ச்சிக் காலமாக அமைந்தன.
- நவீன நாடக ஆசிரியர்கள் படிப்பதற்காக நாடகங்களை எழுதவில்லை. அரங்கத்தில் நிகழ்த்துவதற்கு ஏற்ற வகையில் எழுதினர். வாசகர்களுக்கு என்று எழுதாமல் பார்வையாளர்களுக்காக எழுதினார்.
- எண்பதுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த நாடகப் பயிற்சிப் பட்டறைகள், நாடகக் குழுக்களின் தோற்றம், நாடக விழாக்கள் போன்றவை நவீன நாடகத்திற்கு உந்து சக்தியாக அமைந்தன.
- 1980-களின் காலகட்டத்தில் நாடகம் குறித்த கட்டுரைகளை வெளியிடுவதில் கொல்லிப்பாவை, வைகை, விழிகள், யாத்ரா போன்ற சிறுபத்திரிகைகள் குறிப்பிடத்தகுந்தவையாக இருந்தன.
- கணையாழியிலும் அவ்வப்போது நாடக நிகழ்வுகள் குறித்த செய்திகளும் விமரிசனக் குறிப்புகளும் வெளியிடப்பட்டன.
- சிறுபத்திரிகைகளின் செயல்பாட்டைத் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் நவீன நாடகக் குழுக்கள் உருவாயின.
- கூத்துப்பட்டறை, நிஜ நாடக இயக்கம், பரீஷா, வீதி போன்றன 1980 களில் தொடங்கப்பெற்ற நவீன நாடகக் குழுக்கள்.
- 1990 ஜூலையில் ரெங்கராஜனால் நாடகத்திற்கெனத் தொடங்கப் பெற்ற “நாடகவெளி” என்னும் இதழ் பத்து ஆண்டுகளில் நாற்பது இதழ்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
தழுவல் நாடகங்கள்
- நாடகக் குழுக்கள் தோன்றிய அளவிற்கு நவீன நாடக எழுத்தாளர்கள் தமிழில் இல்லை எனலாம்.
- இந்திரா பார்த்தசாரதி, ந.முத்துசாமி, ஞான.ராஜசேகரன், ஜெயந்தன், ஞாநி போன்றோர் எழுதிய சில நாடகங்களே முதலில் இருந்தன.
- எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் தழுவல் நாடகங்களும் மொழிபெயர்ப்பு நாடகங்களும் ஏராளமாகப் பெருகின.
- பிற மொழிப் படைப்பாளிகளான பாதல் சர்க்காரின் ஏவம் இந்திரஜித், விஜய் டெண்டுல்கரின் கமலா, கிரிஷ் கர்னாட்டின் துக்ளக், பெர்டோல்ட் பிரெகட்டின் வெள்ளை வட்டம் போன்ற நாடகங்கள் தமிழில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
- மு. ராமசாமி மேடையேற்றிய ‘துர்க்கிர அவலம்’, சே. இராமானுஜத்தின் ‘கறுப்புத் தெய்வத்தைத் தேடி’ போன்றவை தழுவல் நாடகங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தன.
நவீன நாடக ஆசிரியர்களும் நாடகங்களும்
நாடக ஆசிரியர்கள் | நாடகங்கள் |
---|---|
ந.முத்துசாமி | காலம் காலமாக, நாற்காலிக்காரர், அப்பாவும் பிள்ளையும், இங்கிலாந்து, சுவரொட்டிகள், உந்திச்சுழி, கட்டியக்காரன், விறகுவெட்டிகள், வண்டிச்சோடை, நற்றுனணயப்பன் அல்லது கடவுள் |
இந்திரா பார்த்தசாரதி | இராமாநுஜர், இறுதி ஆட்டம், கொங்கைத்தீ, ஔரங்கசீப், நந்தன் கதை, பசி, மழை, காலயந்திரங்கள், புனரபி ஜனனம் புனரபி மரணம், தர்மம், போர்வை போர்த்திய உடல்கள் |
சே. இராமானுஜம் | புறஞ்சேரி, பிணம் தின்னும் சாத்திரங்கள், சுமை, முகப்போலிகள், சஞ்சயன் காட்சி தருகிறான், அக்கினிக்குஞ்சு, கேகயன் மடந்தை, வெறியாட்டம், செம்பவளக்காளி, மௌனக்குறம் |
மு.இராமசாமி | துர்க்கிர அவலம், சாபம்!விமோசனம்?, புரட்சிக்கவி, ஆபுத்திரன் |
பிரபஞ்சன் | முட்டை, அகல்யா |
ஜெயந்தன் | மனுசா மனுசா, நினைக்கப்படும் |
ஞான ராஜசேகரன் | வயிறு, மரபு, பாடலிபுத்திரம் |
பிரளயன் | உபகதை, நவீன மத்தவிலாசப் பிரகடனம் அல்லது காஞ்சித் தலைவி |
எம்.டி.முத்து குமாரசாமி | சைபீரிய நாரைகள் இனி இங்கு வரப் போவதில்லை, குதிரைக்காரன் கதை. |
இன்குலாப் | ஔவை, மணிமேகலை |
எஸ்.எம்.ஏ. ராம் | சுயதர்மம், மூடிய அறை, மணிமேகலையின் கண்ணீர், எப்போ வருவாரோ. |
கே.ஏ.குணசேகரன் | பலிஆடுகள், சத்திய சோதனை, பவளக்கொடி அல்லது குடும்பவழக்கு, அறிகுறி, பாறையைப் பிளந்து கொண்டு, கனவுலகவாசி, தொட்டில் தொடங்கி. |
ரமேஷ் – பிரேம் | ஆதியிலே மாம்சம் இருந்தது, அமீபாக்களின் காதல் |
எஸ்.ராமகிருஷ்ணன் | உருளும் பாறைகள், தனித்திருக்கப்பட்டவர்கள், சூரியனின் அறுபட்ட சிறகுகள், அரவான். |
அ. ராமசாமி | ஒத்திகை, மூட தேசத்து முட்டாள் ராஜா, தொடரும் ஒத்திகைகள், 10 குறு நாடகங்கள் |
வ. ஆறுமுகம் | கருஞ்சுழி, ஊசி, தூங்கிகள் |
முருகபூபதி | சரித்திரத்தின் அதீத ம்யூசியம், கண்ணாடியுள் அலைவுறும் பிம்பங்கள், வனத்தாதி, தேகவயல், ரகசிய நிழல்கள், தனித்திருக்கப்பட்டவர்கள், கூந்தல் நகரம், செம்மூதாய். |
- கவிதையியல்
- செவ்வியல் இலக்கியங்கள்
- அறவியல் இலக்கியங்கள்
- நாடகவியல்
- காப்பியங்கள்
- ஐஞ்சிறுகாப்பியங்கள்
- நாடகவியல்
- பெருங்கதை
- கம்பராமாயணம்
- பெரியபுராணம்
- சமய இலக்கியங்கள்
- நாடகவியல்
- சிற்றிலக்கியங்கள்
- புனைகதை இலக்கியங்கள்
- முற்போக்குப் புதினங்கள்
- நாடகவியல்