பெயர்சொல்லின் வகையறிதல்

பெயர்ச்சொல்

  • ஒன்றன் பெயரை குறிக்கும் சொல் பெயர்ச்சொல்.
  • பெயர்ச்சொல்லானது பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்னும் ஆறின் அடிப்படையில் தோன்றும்.
  • பெயர்ச்சொல் திணை, பால், எண், இடம் ஆகியவற்றை உணர்த்தி வரும்;
  • வேற்றுமை ஏற்கும், காலம் காட்டாது.

வகைகள் :-

  • பொருட் பெயர்
  • இடப் பெயர்
  • காலப் பெயர்
  • சினைப் பெயர்
  • பண்புப் பெயர்
  • தொழிற் பெயர்

பொருட் பெயர்

பொருட்களுக்கு இட்டு வழங்கப்பெரும் பெயர் பொருட்பெயர் ஆகும்.

எ.கா :
1. கணினி
2. மேசை
3. பேனா

இடப் பெயர்

இடப்பெயர் என்பது ஒன்றின் இடத்தைச் சுட்டுகின்ற பெயர் ஆகும்.

அங்கு, இங்கு, எங்கு போன்ற சொற்கள் “கு” உருபு ஏற்றுவருகின்ற இடப் பெயர்களுக்குப் பதில் சொற்களாக அமைந்து வருகின்றன.

எ.கா :
1. சேலம்
2. மதுரை
3. சென்னை

காலப் பெயர்

காலப் பெயர் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தை உணர்த்தும் பெயர் ஆகும்.

எ.கா :
1. வினாடி
2. மணி
3. சித்திரை

சினைப் பெயர்

ஒரு பொருளின் உறுப்பினை குறிக்கும் பெயர் சினைப் பெயர் ஆகும். பொதுவாக சினை என்பதற்கு உறுப்பு என பொருள்படும்.
எ.கா :
1. காது
2. கண்
3. தண்டு

பண்புப் பெயர்

ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் பெயர் பண்புப் பெயர் ஆகும். பண்புப் பெயரானது நிறம், வடிவம், சுவை, குணம், அளவு ஆகியவற்றைப் பொருத்து அமையும். பண்புப் பெயரானது அதிகமாக மை விகுதி பெற்று அமையும்.
எ.கா :
1. வட்டம்
2. புளிப்பு
3. இனியன்
4. வெண்மை

தொழிற்பெயர்

ஒன்றின் தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற் பெயர் ஆகும். தொழிற்பெயரானது தல், அல், ஐ, அம் போன்ற விகுதியுடன் அமையும்.
எ.கா :
1. குளித்தல்
2. செயல்
3. செய்கை
4. உறங்குதல்

தொழிற்பெயரின் வகைகள் :

சொற்கள் புணரும் போது தொழிற்பெயரை இரு வகையாக பிரிக்கலாம்.
1. முதனிலை தொழிற் பெயர்
2. முதனிலை திரிந்த தொழிற் பெயர்

1. முதனிலை தொழிற் பெயர் :

முதனிலை தொழிற் பெயர் என்பது தொழிற்பெயரின் பகுதி ஒன்று மட்டும் விகுதி இல்லாமல் வருவதாகும்.
எ.கா :
தொழிற்பெயர் முதனிலை தொழிற் பெயர்
1. வாழ்தல் வாழ்
2. கெடுதல் கெடு

2. முதனிலை திரிந்த தொழிற் பெயர் :

முதனிலை திரிந்த தொழிற் பெயர் என்பது விகுதி கெட்டு பகுதி மட்டும் திரிந்து வருவது ஆகும்.
எ.கா :
தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர்
1. பெறுதல் – பேறு
2. கெடுதல் – கேடு

வினையாலணையும் பெயர்

வினையாலணையும் பெயர் என்பது வினைமுற்றுகளானது பெயராக மாறி மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முற்றுப்பெறுவது ஆகும்.

வந்தான் என்பது ஒரு வினைமுற்று.

வந்தான் சென்றான் என்னும்போது வந்தான் என்பது வினையாலணையும் பெயர்.

இதில் வந்தான் என்னும் வினைமுற்றோடு பெயர் அணைந்துகொண்டு வந்தவன் ஒருவனை உணர்த்துவதைக் காணலாம்.

வந்தான் என்னும் சொல் தனிச்சொல்லாக நிற்கும்போது அதனை வினைமுற்று எனவே கொள்ளவேண்டும்.

வந்தான் கண்டான் – எனத் தெரிநிலை வினைமுற்றைக் கொண்டோ, வந்தான் நல்லன் – எனக் குறிப்பு வினைமுற்றைக் கொண்டோ முடியும்போதுதான் ‘வந்தான்’ என்பதனை வினையாலணையும் பெயர் எனக் கொள்ள வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published.