ஜனநாயகம்

ஜனநாயகம்

ஜனநாயகம்

ஜனநாயகம் என்றால் என்ன

                கிரேக்க மொழியில் “டெமோஸ்” என்றால் மக்கள் என்றும், “க்ரடோஸ்” என்றால் அரசு என்றும் பொருள். எனவே “டெமாக்ரசி” (Democracy) என்றால் “மக்களால் நடத்தப்படும் அரசு” என்று பொருள். சாதி, சமய, இன, நிற, பால் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டும், பொருளாதார, கல்வி, தொழில் பின்னணி நிலைகளுக்கு அப்பாற்பட்டும் மக்களிடமே இறையாண்மை (Sovereign) இருக்கிறது; சட்டத்தின் முன் அனைவரும் சமம்; ஒவ்வொருவரும் தம்மையும் தன்னுடைய விவகாரங்களையும் தான் சரியென்று நம்புகின்ற விதமாக நிர்வகிக்துக் கொள்ள முடியும் என்பது போன்றவையே மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளாகும்.

       இருவகை மக்களாட்சி உள்ளது. ஒன்று ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ளது போல “நேரடி ஜன நாயகம்” (Direct Democracy). இரண்டாவது இந்தியா போன்ற நாடுகளில் உள்ள “மறைமுக ஜன நாயகம் அல்லது பிரதிநிதித்துவ ஜனநாயக அரசு” (Indirect Democracy or Representative Democracy) ஆகும். அதாவது மக்களால் தேர்தல்கள் (Elections) மூலம் தேர்வுசெய்யப்பட்டு, நாடாளுமன்றத்திற்கு பிரதிநிதிகளாக வருவோர், அங்கு மக்களுக்காக சட்டங்களை இயற்றி ஜனநாயக கடமயை செய்வர். மறைமுக ஜனநாயகம் அல்லது பிரதிநிதித்துவ ஜனநாயகம், இரண்டு வகைப்படும். ஒன்று பாராளுமன்ற அரசு (Parliamentary Democracy), மற்றொன்று அதிபர் அரசாங்கம் (Presidential democracy).

       இந்தியாவில், பிரதிநித்துவ நாடாளுமன்ற மக்களாட்சி (Representative Parliamentary Democracy) முறையையே நாம் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எழுத்தறிவு, சொத்துடைமை, வருமான வரி, பால் வேறுபாடு என்று எவ்வித அளவுகோலும் இல்லாமல், பரந்தப்பட்ட இந்த நாட்டின் வயதுவந்தோர் வாக்குரிமை (Universal Adult Franchise) முறையில் வாக்கினை செலுத்து, அதன் மூலம் முழுமையான பிரதிநித்துவதை வழங்க அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் முயன்றுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண் இருபாலருக்கும் வாக்குரிமை (பிரிவு 326), மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமியற்றும் அவைக்கு நிர்வாகம் பதில் அளிக்கும் பொறுப்புடையதாயிருப்பது (பிரிவுகள் 75(3) மற்றும் 164(2)) ஆகிய விதிகள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.

Leave a Reply