சொல்லின் இடையில் மெய்யெழுத்துகள் அடுத்தடுத்து வருவது மெய்ம்மயக்கம் எனப்படும்.
மெய்ம்மயக்கம் வகைகள்
இது உடனிலை மெய்ம்மயக்கம், வேற்றுநிலை மெய்ம்மயக்கம் என இரண்டு வகைப்படும்.
உடனிலை மெய்ம்மயக்கம்
சொற்களின் இடையில் ஒரே மெய்யெழுத்து அடுத்தடுத்து வருவது உடனிலைமெய்ம்மயக்கம் எனப்படும்.
உடனிலை மெய்ம்மயக்கம் எழுத்துக்கள்
க், ச், த், ப்
தமிழில் க், ச், த், ப் ஆகிய மெய்யெழுத்துகள் தம் எழுத்துகளுடன் மட்டுமே சேரும் உடனிலை மெய்ம்மயக்க எழுத்துகள் ஆகும்.
இந்த எழுத்துகளின் அருகில் அவற்றுக்குரிய எழுத்து வரிசை மட்டுமே வரும்.
பிற எழுத்துகள் வாரா.
அவ்வாறு வந்தால் அச்சொல் தமிழ்ச்சொல்லாக இருக்காது.
எடுத்துக்காட்டாக, பக்கம் என்ற சொல்லில் (ப + க் + க் + அ + ம்) க் என்னும் மெய்யெழுத்து தொடர்ந்து இருமுறை வந்துள்ளதைப் பாருங்கள். இதுபோலவேச்,த்,ப் ஆகிய எழுத்துகளும் வரும்.
வேற்றுநிலை மெய்ம்மயக்கம்
சொல்லின் இடையில் வெவ்வேறு மெய்யெழுத்துகள் தொடர்ந்து வருவது வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எனப்படும்.
வேற்றுநிலை மெய்ம்மயக்கம் எழுத்துக்கள்
ர், ழ்
தமிழில் ர், ழ் ஆகிய இரண்டு மெய்யெழுத்துகள் தம் வரிசை எழுத்துகளுடன் சேர்ந்து வராமல் பிற மெய்யெழுத்துகளுடன் மட்டுமே சேர்ந்து வரும்.
எனவே, இவ்விரு மெய்யெழுத்துகளும் வேற்றுநிலை மெய்ம்மயக்கத்திற்கு மட்டுமே உரியவையாகும்.
பிற மெய் எழுத்துக்கள்
க், ச், த், ப், ர், ழ் ஆகிய ஆறனையும் தவிர்த்த ஏனையபன்னிரண்டுமெய்களும் உடனிலை மெய்ம்மயக்கமாகவும் வேற்றுநிலை மெய்ம்மயக்கமாகவும் உள்ளன.
இவற்றையும் மெய்ம்மயக்கம் என்றே கொள்ள வேண்டும்.
ஈரொற்று மெய்ம்மயக்கம்
தனிச்சொற்களிலோ கூட்டுச்சொற்களிலோ சொற்களின் இடையில் ய், ர், ழ் ஆகிய மெய்கள் ஈரொற்றாய் வரும். (மூன்று மெய்களாக மயங்கி வரும்) இதனை ஈரொற்று மெய்ம்மயக்கம் என்பர்.